ஜோதிடம் தொடர்பாக உங்களுக்கு பல கேள்விகள் இருந்தாலும் அதில் முதன்மையானது தோஷமும், பரிகாரமும் ஆகும். இதுதொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில் சொல்லும் விதமாக இந்த கட்டுரை அமையும்.
ஜோதிடம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிரக நிலையை வைத்து அறியப்படும் வானிலை அறிக்கையை போல், அந்த கிரகங்களின் கதிரியக்கத்தால் பூமியில் வாழக்கூடிய மனிதர்களுக்கு ஏற்படும் மாற்றத்தை துல்லியமாக கணிதம் செய்து கொடுப்பதே ஜோதிடம் ஆகும்.
சூரியனை மையமாக வைத்தே அனைத்து கிரகங்களும் சுற்றுகின்றன. அதேவேளையில் சூரியனின் ஒளிக்கற்றையை அனைத்து கிரகங்களும் உள்வாங்கி வெளிவிடுகிறது. அப்படி வெளிவிடும் அனைத்துக் கிரகங்களின் கதிர்களும், புவி ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ள பூமிக்கு வந்து சேருகிறது.
அதன் விளைவாக பூமியில் நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் என ஐந்து வித சக்திகள் உருவாகி, இந்த சக்திகளின் கலப்புகளால் உயிரினங்கள் தோன்றின. என்பதுதான் உண்மை நிலை.
இந்த கதிர் இயக்கங்களை மையப்படுத்தி ஒரு கெடுதலான கிரகத்தின் தசை நடக்கும்போது அந்த கிரகத்தின் கதிரியக்கம் பாதிக்காதவாறு ராசிக்கல் மோதிரம் அணிந்தால், நீங்கள் கெடுதலான பலனை அனுபவிக்க மாட்டீர்கள். என்று கூவி கூவி வியாபாரம் செய்வது, உண்மைக்கு புறம்பான செயல் ஆகும்.
கிரகங்களின் கதிர்களில் நல்ல கதிர் கெட்ட கதிர் என்ற ஒன்றே கிடையாது. அந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பாவகங்கள் என்று சொல்லக்கூடிய 12 வீடுகள் நன்றாக இருப்பது தான் மிக அவசியம்.
இந்த பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீடு பலம் இழந்து இருக்கிறதோ அந்த வீட்டின் பலனை ஒரு கிரகத்தின் கதிரியக்கம் செய்யும்போது எந்த ஒரு மனிதரும் தீமையான பலனையே அனுபவிக்க முடியும்.
இதில் பரிகாரம் என்ற பெயரில், கிரகத்தின் கதிரியக்கத்தையும் பலம் இழந்த வீட்டின் தன்மையையும் மாற்றம் செய்யவே முடியாது என்பது தான் உண்மை நிலை.
உண்மை நிலை இப்படி இருக்கும் போது செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம், ஏழரை சனி, இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்கள், என இவைகள் அனைத்தும் ஜோதிடர்களின் வருமானத்தை முன்நிறுத்தி கொண்டு வரப்பட்ட விசயங்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
முன் காலத்தில் அரசர்கள் ஞானிகள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் 48 நாள் மண்டல பூஜை மற்றும் 48 நாள் விரதம் இருப்பார்களாம். 12 ராசிகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், என 48 நாட்களுக்கு வழிபாடு செய்து அதன் பின்னர் தான் இறுதி முடிவு எடுப்பார்களாம். அந்த சமயத்தில் அவர்கள் 12 ராசிகளுக்குரிய உருவங்களை வழிப்படுதல், 27 நட்சத்திரங்களுக்குரிய பொருட்களை வழிபடுதல், 9 கிரகங்களுக்குரிய பொருள்களை வழிபடுதல், என 48 மண்டல பூஜை நடைபெறுமாம். இதன் பிறகுதான் அவர்களது முக்கிய முடிவு எடுக்கப்படுமாம்.
இதன் நோக்கம் என்னவெனில் நம்முடைய வாழ்க்கையிலும், நமது குடும்பத்திலும், எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் குறைந்தது 48 மணி நேரமாவது அது பற்றி நிதானத்துடன் யோசிக்க வேண்டும் என்பதுதான்.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது அதற்குப் புறம்பாக இதனை மையப்படுத்தி இன்றைய பரிகார பூஜைகள் மிகப்பெரிய பொருள் செலவில் நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு ஜாதகருக்கும் உண்மையான பரிகாரம் என்பது அந்த ஜாதகரின் 12 வீடுகளில் எந்த வீடு சதவீத அடிப்படையில் நன்றாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, அந்த வீட்டை எந்த கிரகத்தின் கதிரியக்கம் இயக்குகிறது என்பதையும் கண்டுபிடித்து, அந்தக் கிரகத்தின் நட்சத்திர நாட்கள் வரும் போது மவுன விரதம் இருந்து, மாலைப் பொழுதில் தனிமையான இடத்தில் அமர்ந்து, தன் மனதில் எழக்கூடிய எண்ண ஓட்டங்களை, மூன்றாவது நபராக இருந்து அந்த எண்ணங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும்.
இதை செய்து வர வர மனதில் நேர்மறையான எண்ணங்களின் சக்தி அதிகமாகும், நேர்மறை எண்ணங்களின் சக்தி அதிகமாகும் போது, நிகழ்கால வாழ்க்கைக்கு தேவையான எண்ணங்கள் மட்டுமே மனதில் தோன்றும்.
எதிர்மறை எண்ணங்களின் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய நபர்கள் தான், பரிகாரம் என்ற பெயரில் பெரிய அளவிலான பொருள் செலவுகளை செய்ய முன்வருகின்றனர் என்பது தான் தற்காலத்தில் நடக்கும் எதார்த்த உண்மை.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக